Tuesday, June 9, 2015

இந்து மதம் திணிக்கப்பட்டதா?

வெகு நாட்களுக்குப் பிறகு  எனதுப் பதிவை மறுபடியும் தொடங்குகிறேன். இந்த முறை வாரம் ஒரு பதிவாவது செய்ய முயற்சிக்கிறேன். எனது  இன்றைய தலைப்பும், பதிவும் எனது நண்பன்  ஒருவன் WhatsApp-ல் எனக்கு அனுப்பிய சில கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எனது நண்பனின் கருத்து: பாரதம் என்பது ஒரு தேசம் அல்ல. அது ஒரு சில மாநிலங்களின் தொகுப்பு மட்டுமே. அது இந்தியா - ஹிந்தியா அல்ல. வெள்ளையர்கள் தம்மை விட கருமையாக இருந்த அனைவரையும் "இண்டீஸ்" என்றே அழைத்தனர். செவ்விந்தியர், மேற்கு இந்தியர், மற்றும் ஆஸ்திரேலியாவில்...எனவே இந்து மதம் என்பதே ஓர் பெரிய சமூகத்தின் மேல் திணிக்கப்பட்ட ஒன்று.

Original contents from my friend: First of all Bharath was collection of states. India not Hindia. White people called the gray or black as indies...like Red Indians, West Indies, in Australia (??). So Hindu is imposed on the very big crowd.

குறிப்பு: ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர் உள்ளனர். அவர்களை இந்துக்கள் என்றோ இந்தியர்கள் என்றோ அழைப்பதில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் 40000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவில் இருந்து படகுகள் மூலம் வந்ததாகக் கூறிகொள்கின்றனர். நான் ஆஸ்த்ரேலியாவில் இருந்த பொழுது (1997 - 1999) ஒரு தமிழ் நண்பர் Queensland University-இல் தமிழுக்கும், aborigines எனப்படும் ஆஸ்த்ரேலிய  பழங்குடியினரின் மொழிக்கும் உள்ள தொடர்பை குறித்து முனைவர் ஆராய்ச்சி (Doctorate) செய்துகொண்டு இருந்தார். இது குறித்து இன்னமும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.  

இந்த கருத்து இன்று எனக்கு எனது நண்பன் மூலமாக வந்தாலும், பெரும்பாலான குத்தறிவுப் பாசறைகள் (இவர்களை இனி சுருக்கமாக பப்பா அல்லது பப்பாக்கள் என்று அழைப்போம்) வெகு காலமாக முழங்கிக்கொண்டு  வருகிறார்கள்.இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்று பார்ப்போமா?

உண்மை என்ன? இந்து மதத்திற்கு பெயரே கிடையாது. சனாதன தர்மம் என்றே இது வழங்கப்பட்டு  வந்தது. சிந்து நதிக்கு அப்பால் இருந்ததால் இந்த மக்களை இந்துக்கள்  என்று அழைத்தனர். அதுவே, நமது மதத்திற்கும் பெயராகி விட்டது. இதை யாரும் யார் மேலும் திணிக்க வில்லை. ஆங்கிலேயர்கள் தமது பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு அங்கமாக திராவிடர்களே இந்தியா முழுவதும் இருந்ததாகவும், தேரின் மீது ஏறி வந்த ஆரியர்கள் திராவிடர்களை ஓட ஓட விரட்டியதாகவும், பின்னர் தமது "வேத மதத்தை" அனைவரின் மீதும் புகுத்தியதாகவும் கதை கட்டி  விட்டனர். மேலும், தமது கிறித்துவ மதத்தைப் பரப்ப அவர்களுக்கு ஒரு வழி வேண்டி இருந்தது.  அந்த கால கட்டத்தில் இருந்த வேறுபாடுகளை நன்றாகப் பயன்படுத்தி, நீங்கள் கடைபிடிக்கும் இந்து மதமே உங்கள் மேல் திணிக்கப்பட்ட மதம் தான். நாங்களும் திணித்தால் என்ன என்றார்கள்.

ஆனால், அவர்களுக்கே தெரியாது நமது பப்பாக்கள் அதை இத்தனை காலம் நம்பிக் கொண்டு இருப்பார்கள் என்று. அவர்களுக்கு வியாபாரம்  முடிந்தது,வேறு கதை கிடைத்துவிட்டது. பப்பாக்களோ  இன்றும் இந்த கட்டுக்கதையை நம்பி கொண்டு தமது வியாபாரத்தை நடத்தி வருகின்றனர். 

நான் கேட்கிறேன்... முறத்தால் அடித்துப் புலியைத் துரத்திய வீரப் பெண்மணிகளைக் கொண்ட நமது சமுதாயம் தோற்றோடி வந்திருக்குமா? அல்லது வெற்றி அல்லது வீர மரணம் என்று உயிரை விட்டிருப்போமா? ஆரியர்கள் தேர் மீதும் குதிரை மீதும் வந்ததால் அவர்களுக்கு வெற்றி எளிதானது என்று கூறுகிறோமே? கடல்கோள் வந்து அழிந்து போன குமரிக்கண்டத்தில், கபாடபுரத்தில், இரண்டாம் தமிழ் சங்கத்தை வளர்த்த அரசர்களுக்குள் "வெண்தேர் செழியன்" என்ற மன்னனின் பெயர் வருகிறதே, அப்படியென்றால் திராவிடர்களுக்கு தேரைப்பற்றியும்,குதிரையைப் பற்றியும் தெரியாமலா போயிருக்கும். இல்லை, வெண்தேர் செழியனது தேரை  குதிரைகள் அல்லாமல் கரப்பான் பூச்சிகள் இழுத்தனவா? இன்றைய புதிய ஆராய்ச்சிகள், இந்த ஆரிய ஆக்கிரமிப்புக் கட்டுகதையை பொய்யாக்கிவிட்டன. அனால் நமது பப்பாக்களுக்கு வேறு வேலை எதுவும் செய்யத்தெரியாதே.  ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தவரைக் குறிக்கும் சொற்களே. இதில் வேறு நாட்டவர், துரத்திவிட்டனர் என்பதெல்லாம் பொய் என்றாகிவிட்டால் பப்பாக்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள். அதனால் தெருத்தெருவாக இந்த பொய்களை உண்மையைப்போலவே கூவிக்கொண்டு திரிகின்றனர்.

அடுத்தது மதத்  திணிப்பைப் பற்றிப் பார்ப்போம். (மூன்றாம்) சங்க இலக்கிய காலத்தில் இந்து மதம் தமிழகத்தில், பரவலாக இருந்தது என்பது அந்த இலக்கியங்களை, வேறு விகாரமான எண்ணங்கள் இல்லாமல், உண்மையை அறியும் நோக்கில் படிப்பவர்களுக்கு "உள்ளங்கை நெல்லிக்கனி" என விளங்கும். சில உதாரணங்கள்:

1. ஐந்திணைகள் என்பது தமிழுக்கு மட்டுமே உரியது. வேறு எந்த இலக்கணத்திலும் இவ்வாறு  இல்லை. இந்த ஐந்து தினைகளுக்குமே ஆரிய, இந்து கடவுள்களையே கடவுளாகக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

2. எட்டுத்தொகை நூல்களில், ஏழு நூல்களுக்கு கடவுள் வாழ்த்தாக இந்துக் கடவுளரே துதிக்கப்படுகின்றனர் (புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து - சிவன்; குறுந்தொகை - முருகன்;நற்றிணை, ஐங்குறுநூறு - திருமால்). பரிபாடலின் கடவுள் வாழ்த்துப் பாடல் கிடைக்கவில்லை, ஆனால், அந்நூலில் திருமால் பெருமைகளும், சேயோன் (முருகன்) பெருமைகளும் விரித்துரைக்கப்பட்டுள்ளது. தங்கள் மேல் திணிக்கப்பட்ட ஆரியரின் புராணங்களிலும், இதிகாசங்களிலும் வரும் செய்திகளை தமது இலக்கியத்தில் சேர்த்திருப்பார்களா? (குறிப்பாக நற்றிணையின் கடவுள் வாழ்த்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் "பூ: பாதௌ, யஸ்ய நாபிர்..." என்ற ஸ்லோகத்தின் பொருளை ஒற்றி உள்ளது)

3.  பரிபாடலில் சாம வேதத்தின் திரண்ட பொருள் என்ற தலைப்பிலேயே பாடல் ஒன்று வருகிறது. தங்களை தோற்கடித்து துரத்திய ஆரியரின் மதத்தையும், அவர்களது வேதங்களையும் புகழ்ந்திருப்பர்களா?

4. எந்த சங்கப்பாடலிலும் சிந்து நதியைப்பற்றிய குறிப்பு காணப்படவில்லை. கங்கை நதி பற்றி ஒன்றிரண்டு குறிப்புகள் காணப்படுகின்றன. தாங்கள் சிந்து நதிக் கரையிலிருந்து வந்திருந்தால் அந்த நதியை ஒரே அடியாக மறந்திருப்பார்களா என்ன?

5. மிக முக்கியமான குறிப்பொன்று நமது கண் முன்னாலேயே உள்ளது. நாம் அனைவரும் "கடியலூர் உருத்திரங் கண்ணனார்" என்ற புலவர் பெயரைக் கேள்விப்பட்டிருப்போம். அவரது பெயரின் பொருள் என்ன? அது ருத்ராக்ஷம் என்ற வடமொழி சொல்லின் நேரடி தமிழாக்கமே ஆகும் (உருத்திரன் - ருத்ரன் என்பதன் தமிழாக்கம், கண் - அக்ஷம் என்ற வடமொழி சொல்லின் பொருள்). ஒரு வேளை  இவரது பெயரே  ருத்ராக்ஷம் என்பதன் தமிழாக்கமாக இருந்திருக்கலாம் அல்லது இவர் ருத்ராக்ஷம் அணிந்திருக்கலாம் (அதுவே அவரது பெயராகவும் ஆகி இருக்கலாம்).

ஏன்  நான் இந்த ஒரு பெயரை குறிப்பாகக் கூறுகிறேன்? நமது பப்பாக்களின் மற்றொரு வாதம், தமிழர்கள் தாங்களாக சில கடவுள்களை துதித்து  வந்தனர். தமிழர் போற்றிய கடவுளை வேத கால ருத்ரன் என்று ஆரியர்கள் திரித்துவிட்டனர் என்பது இவர்களின் வாதம். பெரும்பாலும் வடநாட்டில் மட்டுமே விளையும் ருத்ராக்ஷத்தை தனது பெயராக சங்கத்தமிழ்ப் புலவர் ஒருவர் கொண்டுள்ளார் என்றால் இது வரை பப்பாக்கள் கூறியது பொய் என்பது தெளிவாக விளங்குமன்றோ? இது தெரிந்ததாலோ என்னவோ, பப்பாக்கள் அனைவரும் இந்த புலவரின் பெயரை "உருத்திரம்" "கண்ணனார்" என்று பிரித்தேதான் கூறுவார்கள். நமது தமிழ் ஆசிரியர்களும் அவ்வாறே நமக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இது மட்டும் உருத்திரன் என்று இல்லாமல் "ஏசை" என்றோ "சூசை" என்றோ  இருந்திருக்கட்டும். பப்பாக்கள் அனைவரும் சங்கத் தமிழுக்கு சிலுவை கட்டி இருப்பார்கள். ஏதோ தமிழ் தப்பித்தது.

6. அகநானூற்றிலும், புறநானூற்றிலும் சில இராமாயணக் காட்சிகளைப் பற்றிய வர்ணனைகள் வருகின்றன. இந்தபாடல்களில் உள்ள காட்சி அமைப்பும், கற்பனையும், வால்மீகி இராமாயணத்தில் இல்லை. எனவே, அக்காலத்தில், வால்மீகி இராமாயணத்தை தழுவாத தனிப்பட்டதொரு இராமாயணம் இருந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. மேலும், பழைய மகாபாரதம் ஒன்றும் சங்க காலத்தில்  இருந்திருக்கிறது. பல எட்டுத்தொகை நூல்களுக்கு கடவுள் வாழ்த்து எழுதிய பெருந்தேவனார்க்கு "பாரதம் பாடிய பெருந்தேவனார்" என்ற பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை எல்லாம் இராமாயணமும், மகாபாரதமும்  சங்க காலத்திற்கும் முன்பே தமிழகத்தில் பரவி இருந்ததை விளக்கும்.

7. பல இடங்களில் அந்தணர்கள் வேதங்களை ஓதி வந்தனர் என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. தம்மை தோற்கடித்து துரத்தியவர்களின் வேதங்களை ஏன் தமிழர்கள் ஓத வேண்டும்?

8. "பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி" என்னும் மன்னனின் பெயரிலேயே இவன் யாகங்களை செய்தான் என்பது விளங்கும்

இவை எல்லாம் "ஒரு சோறு"  மட்டுமே. மற்ற சங்க இலக்கியங்களை (காமாலைக் கண் இல்லாமல்) சற்றே புரட்டினால் கூட  "பல பானை சோறுகள்" கிடைக்கும்.

9. மேலும், வடமொழி புராணங்களும் வேதங்களும் வேதாந்தங்களும் தென்னாட்டவரை வெறுப்புடனோ, ஏளனமாகவோ கூறவில்லை. ஆக, தோற்றவனும் வென்றவனை வெறுக்கவில்லை....வென்றவனும் தோற்றவனை கேலி பேசவில்லை....இந்த போர் உண்மையிலேயே நடந்ததா? அவ்வாறே போர்கள் நடந்திருப்பினும் அவை ஆரிய, திராவிட இனங்களின் போராட்டமா? அல்லது ஏதோ போருக்கு நாம் "இனப் போர்" சாயத்தை பூசிவிட்டோமா?

பப்பாக்களின் கேள்வி: தமிழர்கள் இயற்கையை மட்டுமே வழிபட்டனர். அவர்கள் இந்துக்கள் என்று எப்படி கூறுகின்றீர்கள்?

சங்க காலத்திற்கும் முற்பட்ட தமிழர்கள் இந்து மதத்தை அல்லாத இயற்கையை வழிபட்டனர் என்பதற்கு ஏதேனும் சான்று உள்ளதா? இல்லை. இயற்கையை வழிபடுதல் என்பது இந்து மதத்தில் உள்ள ஒரு அடிப்படை கொள்கை. வேதத்தில் கூட பரம்பொருளைப் பற்றி கூறும் முன்பே அக்னி, இந்திரன், வருணன், சரஸ்வதி (ஆறு) ஆகியவர்களின் துதி வருகின்றது. இன்றைக்கும் அந்தணர்கள் தினமும் செய்யும் "சந்தியா வந்தனம்" என்பது இயற்கை வழிபாடே (அதில் சூரியனையே வணங்குகிறார்கள்). தொல்காப்பியத்தின் மேற்கோளின் படி ஐந்திணைகளின் கடவுளராக  இந்துக் கடவுள்களைக் குறிப்பிடுவதன் மூலம், தமிழர்கள் இந்து மதத்திற்கு உட்பட்ட இயற்கை வழிபாட்டையே செய்து வந்தனர் என்பது விளங்கும். 

நம் கண்முன்னே இத்தனை சான்றுகள் இருக்க, ஏன் பப்பாக்கள் இதை ஏற்க மறுக்கின்றனர்? ஏற்றுக்கொண்டால், அவர்களின் வியாபாரம் படுத்து விடுமே!! வேறு வேலையும் தெரியாதே!! என்ன செய்வது!! எனவேதான் அவர்கள் பொய்களை கூறி மக்களை ஏமாற்றும் வேலையை செய்கின்றனர். அறிவுள்ளவர் விழித்துக்கொண்டால் நாட்டுக்கு நல்லது. இல்லையேல் நமக்குத்தான் கேடு.

முடிவில், நானொரு விளக்கத்தைக் கூற விழைகிறேன். நான் இந்து மதத்திற்கு சார்பான பல சான்றுகளை கொடுத்துள்ளேன் - இதன் பொருள், சங்க காலத்தில் இந்து மதம் மட்டும் தான் இருந்தது என்பதில்லை. "தமிழர்கள் இந்துக்களே இல்லை, இந்து மதத்தை தமிழர்கள் மீது திணித்தனர்" என்ற (தவறான) வாதத்தை தகர்க்கத்தான் அந்த சான்றுகளை குறிப்பிட்டேன். சங்க காலத்தில் தமிழகத்தில் சமணர்களும், பௌத்தர்களும் இருந்துள்ளனர். அவர்கள் பல இலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளனர்.