Wednesday, July 29, 2015

ஹிந்து மதத்தில் அறிவியல்!!!

 ஹிந்து  மதம் என்றழைக்கப்படும் "சனாதன தர்மம்" மிகவும் பழமையான மதமாகும். இதை மதம்  என்று கூறுவதைவிட வாழ்க்கை நெறி என்று அழைப்பதே  பொருத்தமாகும். இதில் இருக்கும் அளவிற்கு தத்துவங்களும் அறிவியல், இயற்கை  உண்மைகளும் வேறு மதங்களில் பெரிதாகக் காணப்படவில்லை என்று கூறினால் அது மிகையாகாது. உதாரணமாக, சுமார் 400, 500 வருடங்களுக்கு முன்பு வரை மேற்கத்திய நாடுகள் "உலகம் தோன்றியது கி.மு. 4400-ல்" என்றே நம்பி வந்தனர். ஆனால், அன்றும் சரி, இன்றும் சரி, உலகம் தோன்றி பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டது என்று ஆணித்தரமாகக் கூறிய ஒரே மதம் நமது ஹிந்து மதம் ஒன்றே. நமது முன்னோர்கள் ஆன்மிகம், அறிவியல் மற்றும் உளவியல் ஆகிய மூன்றிலுமே சிறந்து விளங்கினர்.  எனவே தான் பல அறிவியல் உண்மைகளை சாமானிய மக்களும் அறிந்து கொள்ளக்கூடிய நோக்கில் தொகுத்து வைத்தனர். அதில் உள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை இங்கு காண்போம்.

இந்த பிரபஞ்சத்தின் (அண்டத்தின்) படைப்பையும், அழிவையும் குறித்து அனைத்துப் புராணங்களும், உபநிடதங்களும் ஏறக்குறைய ஒன்று போலவேக் கூறிகின்றன.  (இந்த  உலகில் நாம் காணும் அறிவுள்ள மற்றும் அறிவற்ற) அனைத்திற்கும் மூலப்பொருள் என்பது "மூலப்ரக்ருதி" என்பதாகும். அதிலிருந்தே அனைத்தும் தோன்றியது. 

இங்கே நாம், நமது புனித நூல்கள் (வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் புராணங்கள்) தெரிவிக்கும் ஒரு நுண்ணிய கருத்தை நோக்கவேண்டும். இன்றைய அறிவியல் அனைத்தையும் உயிருள்ள, உயிரற்ற பொருட்களாகப் பிரிக்கும். உதாரணமாக, கல், மண் போன்றவை உயிரற்றவை. மரம், செடி, கோடி, மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் ஆகியவை உயிருள்ளவை. நமது நூல்களோவெனில், இவற்றை சற்றே வித்தியாசமாக, அறிவுள்ள மற்றும் அறிவற்ற பொருட்களாகப் பார்க்கும். உயிரற்ற அனைத்தும் அறிவற்றவையே (கல், மண் போல).  ஆனால், அறிவியல் உயிருள்ளதாகப் பார்க்கும் பொருட்களையும் இரண்டாகப் பிரித்தனர் நமது முன்னோர் . நம்மையே எடுத்துக்கொள்வோம்: நமது இந்த உடலானது அறிவற்றது. அதற்குள் இருக்கும் ஆத்மாவே அறிவுடையது. இதை எப்படி அறியலாம் என்றால், இந்த உடலுக்குள் ஆத்மா இருக்கும் வரை ஒருவரை நாம் "எப்படி இருக்கிறார்?" என்று உயர்திணையில் பேசுகிறோம். ஆத்மா வெளியேறி  விட்டபிறகு, அந்த உயிரற்ற உடலை "இதை எப்பொழுது  எடுக்க போகிறார்கள்?" என்று அஃறிணையில் குறிக்கிறோம். எனவே, உடல் என்பது அஃறிணைப்   பொருள் (அறிவற்றது). ஆனால், அறிவியலும் சரி, நமது புராணங்களும், உபநிடதங்களும் சரி, அனைத்துமே ஒரே மூலப்பொருளில் இருந்தே தோன்றியது என்று கூறும்.

மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருவோம். மூலப்ரக்ருதியிலிருந்து மஹத் (அல்லது மஹான் என்றும் கூறுவர்கள்) தோன்றும், மஹத்திலிருந்து அஹங்காரம் (consciousness), அஹங்காரத்திலிருந்து நாம் காணும் (காணும் என்றால், கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தொட்டு, உணரும்) அனைத்தும் தோன்றுகின்றன. இதில் முதலில் தோன்றுவது "சப்தம்" என்னும் தன்மை (இதை தன்மாத்திரை என்று கூறுவர்கள்). இன்றைக்கு அறிவியல் இதை 100% ஒத்துக்கொள்கிறது. "Big Bang Theory"யை நிரூபிப்பதற்கு, 1960களில் கண்டுபிடிக்கப்பட்ட "Cosmic Microwave Background Radiation" ஒரு முக்கிய பிரமாணமாக இன்றும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. சப்தம் என்றால் நாம் கேட்கும் ஒலி  மட்டுமல்ல, அனைத்து அதிர்வுகளும், அலைகளும் சப்தங்களே (vibration).

சப்தத்திலிருந்து முதலில் ஆகாயம் தோன்றியது. பிறகு, ஸ்பரிசம் எனும் தொடு உணர்ச்சி தோன்றியது. அதிலிருந்து, காற்று. பின்னர், உருவம். அதிலிருந்து தீ. சுவை, அதிலிருந்து நீர். கடைசியாக மணம், அதிலிருந்து நிலம். இந்த ஐம்பூதங்களின் வெவ்வேறு சேர்க்கையே (நமது பூமி மட்டுமல்ல) இந்தஅண்டம் முழுவதும். ஐம்பூதங்களில் (வான், காற்று, தீ, நீர், நிலம்), நீர் மற்றும் நிலம் தோன்றிய வரிசையை மட்டும் அறிவியல் ஒத்துகொள்வதில்லை. மற்றவைகளை, அறிவியல் அப்படியே ஒத்துகொள்கிறது.
 
அண்டத்தின் அழிவைப்பற்றியும் புராணங்களும், உபநிடதங்களும் விரிவாகக் கூறும். இதன் அழிவு, இது எவ்வாறு தோன்றியதோ, அந்தத் தோற்றத்தின் பின் வரிசையில் செல்லும். நிலம் நீரில் கலக்க, நீர் தீயில் கலக்க, தீ காற்றில், காற்று ஆகாயத்தில், முடிவில் அனைத்தும் மூலப்ரக்ருதியில் சென்று முடியும். அண்டத்தின் அழிவைப்பற்றி  அறிவியலில் பல கருத்துக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, "Big Bang" என்பதைப்போல அனைத்தும் "Big Crunch" என்பதில் ஒடுங்கிவிடும் என்பதாகும். இது, நமது புராணங்களும், உபநிடதங்களும் கூறும் கருத்தை ஒத்துப் போகிறது.

குறிப்பு: மூலப்ரக்ருதியுடன் நிற்காமல், புராணங்களும் உபநிடதங்களும் இவை அனைத்துமே பரம்பொருளிடமிருந்து தோன்றி, மறையும் என்று கூறுகின்றன. அறிவியல் இதை ஒப்புக்கொள்ளாது. ஆனால், அந்த அறிவியலுமே, இந்த அண்டத்தின் தோற்றுவாய் (Point of Singularity, which is origin of this universe) எதில் லயித்திருக்கிறது என்று கூறமுடியாமல் தவிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த தன்மாத்திரைகளுக்கும், ஐம்பூதங்களுக்கும், நமது ஐம்புலன்களுக்கும் தொடர்பு உள்ளது. சப்தத்திற்கு செவி, தொடு உணர்ச்சிக்குத் தோல், உருவத்திற்குக்  கண், சுவைக்கு நாக்கு, மணத்திற்கு மூக்கு. நமது வழக்கில் ஒரு பழமொழி உள்ளது "அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் இருக்கும்", அதாவது நமது உடலும், இந்த பிரபஞ்சமும் தொடர்புடையவை என்று. பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது சப்தம் என்று பார்த்தோம். நமது உடலிலும் முதலில் தோன்றும் புலன் "கேள்விப் புலன் அல்லது செவிப் புலனே". புராணங்களில் பிரஹலாதன்  கதையிலும், மகாபாரதத்தில் அபிமன்யுவின் கதையிலும் இந்த கருத்து வெளியிடப்படுகிறது.

இதை அறிவியலும் ஒத்துக்கொள்கிறது. பார்க்கவோ, சுவைக்கவோ, முடியாத நிலையில், கருவில் "உருவாகிக்கொண்டிருக்கும்" குழந்தைக்குக் கூட கேட்கும் திறன் உருவாகிவிடுகிறது. 

எவ்வாறு அண்டம் அழியும் பொழுது இறுதியில் ஆகாயம் அழிகிறதோ, அதைப்போலவே, இந்த உயிர் உடலைவிட்டுப் பிரியும் பொழுதும், இறுதியாக நீங்கும் புலன் "செவிப் புலனே". இதை எந்த கதையின் வாயிலாகவும் கூறவில்லை. ஆனால், இறந்த பிறகு (சில சமயம் இறக்கப் போகிறார் என்று நிச்சயமாகத் தெரிந்த பிறகு) "கர்ண மந்திரம்" என்ற ஒரு சடங்கு உள்ளது. இதில், இறக்கும் தருவாயில் இதைக் கேட்கும் ஆத்மா நல்ல கதியை அடைய வேண்டும் என்பதற்காக, இறந்தவரின் (அல்லது இறக்கப் போகிறவரின்) காதுகளில் தெய்வத்தின் பெயர்களை உச்சரிப்பார்கள். காசியில் இறந்தால் முக்தி என்று கூறுவதும் இந்த காரணத்தைக் கொண்டே. அங்கு இறப்பவரின் காதுகளில் பகவான் ஸ்ரீ விஸ்வநாதரே "ராம, ராம, ராம..." என்ற தாரக மந்திரத்தை "கர்ண மந்திரமாக" உரைப்பார் என்று நம்பப்படுகிறது (இதை நம்மால் நிருபிக்க இயலாது; ஏனெனில், கண்டவர் சொன்னதில்லை, சொன்னவர் கண்டதில்லை).

இதையும் பல மருத்துவர்கள் கூறியுள்ளனர். அனைத்து நினைவையும் இழந்து "Coma" வில் இருப்பவர்கள் கூட, தமது கேட்கும் திறனை இழப்பதில்லை. இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்குக் குறிப்பாக கேட்கும் திறன் அதிகரிக்கும் என்றும், தானிருக்கும் அறை மட்டுமல்லாது, சற்று தொலைவில், மற்ற அறையில் இருப்பவர்கள் பேசுவதும் கேட்கும் என்று சில மருத்துவர்களும், இறந்தவர்களுடன் கடைசி நிமிடங்களில் பணியாற்றிய செவிலிகளும் (Nurses) கூறுகின்றனர். இதை நிரூபிப்பது கடினம், ஏனெனில், உயிர் பிரிந்த எவரும் வந்து நம்மிடம் நடந்ததைக் கூற இயலாது. ஆனால், Google search செய்தால், இத்தகைய பல செய்திகளை நாம் படிக்கலாம்.

ஆக, புராணங்களும், உபநிடதங்களும் ஏதோ பொழுது போக்காக உருவானவை அல்ல. அவை அறிவியல் மற்றும் மனவியலை உள்ளடக்கிய ஆன்மீகப் புதையல்கள். நமக்கு புரியவில்லை என்பதற்காக அவற்றை எள்ளி நகையாடுவதாலோ, மதிக்காமல் இருப்பதாலோ நஷ்டம் நமக்குத்தான். இவற்றை தகுந்த குருவின் மூலம் கற்று, கேட்டு, புரிந்து கொள்வதிலேயே நமது முன்னேற்றம் உள்ளது.