Friday, May 6, 2016

இதுதான் "செக்யுலரிசம்"

ஒரு தேசத்தை அழிக்க வேண்டுமென்றால்,  மக்களையோ, மாட மாளிகைகளையோ அழிக்கத்தேவையில்லை. அதன் வரலாற்றை அழித்தால் போதும். நாம் "நேற்றைய வரலாற்றிலிருந்து தான்" நமது "நாளைய எதிர்காலத்தைத் தொடங்குகிறோம்". நம் தமிழ் பண்பாட்டின் வரலாற்றை புரிந்து கொள்ள பெரிதும் உதவுவது நம் இலக்கிய நூல்கள். இதைக்கொண்டே, நம் முன்னோர் எவ்வாறு வாழ்ந்தனர், எத்தகைய வீர செயல்களைப் புரிந்தனர், எந்தக் கடவுளரை வணங்கினர் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

சங்க காலம் தொட்டு, நம் இலக்கிய நூல்கள் பெரும்பாலும் இந்து மதம் என்று அழைக்கப்படும் சனாதன தர்மத்தையே சார்ந்து  இருந்தன.  ஆனால், இன்று நாம் நமது தலைமுறையை (ஏன், நம் பெற்றோரின் தலைமுறைக்கூட) கேட்டால், தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் "மத சார்பற்றவை" என்றே கூறுவார்கள். நாயன்மார்களும், ஆழ்வார்களும் வந்த பிறகுதான் இது மாறியது என்றும் கூறுவார்கள். இந்த உண்மைக்குப் புறம்பான கருத்து மாற்றத்தின் பின்னணி என்ன? பல ஆண்டுகளாக நமது இலக்கியத்தில் வரும் இந்து மதக் கருத்துக்கள், பகுத்தறிவுப் பாசறைகளால் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டதால் வந்த விளைவுதான் இது.  இந்தப் பதிவில் நமக்கு தெரிந்த, நமது பாட புத்தகத்தில் வந்த இலக்கியங்களை நான் இதற்கு ஆதாரமாக தருகிறேன்.

1. பெரும்பாலும் பெரியவர்கள் பள்ளிக்குச் சென்று படிக்காதவர்களை "இவனுக்கு ஆத்திசூடிக் கூடத் தெரியாது" என்று கூறுவார்கள். அந்த ஆத்திச்சூடியிலிருந்து ஆரம்பிப்போம். இந்த நூலிற்கு "ஆத்திசூடி" என்ற பெயர் ஏன் வந்தது? என்றாவது நமது தமிழாசிரியர்கள் நமக்கு இதைக் கூறியிருப்பார்களா? அல்லது, நமது பாடப் புத்தகத்தில் தான் இருந்ததா? இந்தக் கேள்வியின் விடை இதோ.

நமது பண்பாட்டின் படி அனைத்து நூல்களும் இறை வணக்கத்துடன் தான் தொடங்க வேண்டும். ஔவையார் இந்த நூலிற்கு எழுதிய இறை வணக்கபாடல்: "ஆத்திச்சூடி அமர்ந்த தேவனை ஏத்தியேத்தித் தொழுவோம் யாமே". இதன் பொருள்:  ஆத்திப்பூவை சூடியிருக்கும் சிவபெருமானுக்குப் பிடித்த (அமர்ந்த) தெய்வமான விநாயகப் பெருமானை வணங்குவோம். பெயரிடப்படாத (பெயர் தெரியாத) இந்த நூலிற்கு அதன் இறைவணக்கத்தின் முதற் சொல்லையே பெயராக இட்டனர்.

மேலும், ஆத்திசூடியில் 12 வரிகள் தான் நமக்குத்தெரியும். ஆனால், மொத்தம் அதில் 108 வரிகள் என்பது நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட மற்றொரு உண்மை. 108 என்பது இந்து மதத்தில் ஒரு முக்கியமான எண்ணிக்கை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும், அதில் வரும் ஒரு வரி "திருமாலுக்கு அடிமை செய்" என்பது. ஆக, 108யும் காட்டிவிட்டால், 108 என்ற எண்ணிக்கைக்குப் பதில் சொல்ல வேண்டும். "திருமாலுக்கு அடிமை செய்" போன்ற வரிகளுக்கும் பதில் சொல்ல வேண்டும். செக்யுலரிசம் செத்து விடும் இல்லையா?  எனவே, 12-ஐ மட்டும் காட்டினர்.

2. நாம் அனைவரும் சிறுவராய் இருந்த பொழுது படித்த மற்றொரு மறக்க முடியாதது "ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்" என்று தொடங்கும் உலகநீதி என்ற நூலின் வரிகள். இதில் மொத்தம் 13 செய்யுள்கள் உள்ளன (அல்லது நமக்கு இப்பொழுது 13 செய்யுள்கள்தான் கிடைத்துள்ளன என்றும் வைத்துக்கொள்ளலாம்). அதில் வரும் முதல் செய்யுளை மட்டும் இங்கு கொடுத்துள்ளேன். 
"ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம் 
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் 
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம் 
    வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் 
போகாத இடந்தனிலே போக வேண்டாம் 
    போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் 
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் 
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே"

கடைசி இரண்டு வரிகளை மீண்டும் படிக்கவும். அந்த நூலில் உள்ள அனைத்து செய்யுள்களுமே முருகப்பெருமானின் புகழைப்பாடியே முடிகின்றன. கடைசி இரண்டு வரிகள் நமது பாடப் புத்தகங்களில் நீக்கப்பட்டிருக்கும்.

3. இது ஒரு விவகாரமானப் பகுதி. நமது பகுத்தறிவுப் பாசறைகள்  திருவள்ளுவர் ஒரு சமணர் என்று நிரூபித்து விட்டனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை? திருவள்ளுவரைப் பற்றி வரலாற்று சான்று எதுவும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. பெரும்பாலும், அவர் சமணர் என்பதற்கு அவருடைய திருக்குறளிலிருந்தே சான்றுகள் தரப்படுகின்றன. அவை அனைத்துமே அவர் சமணர் தான் என்பதை தெளிவாக நிரூபிக்க இயலாதவை.

திருக்குறளில் இந்து மதக் கடவுளரையும், இந்து மதக் கருத்துக்களையும் குறிக்கும் பல குறள்கள் உள்ளன. இவற்றை நம் பகுத்தறிவுப் பாசறைகள் தெரிந்தாலும் தெரியாததுபோல நடிப்பார்கள். அவற்றுள் சில:

1. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் தான் இம்மூன்றும் இதே வரிசையில் வருகின்றன (தர்மார்த்த காம மோக்ஷம்...). இந்து மதத்தில், அளவோடு, தம் மனைவியோடு மட்டும் கொள்ளும் காமம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.சமண மதத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று "அபரிக்ரஹா" என்பதாகும் - அதாவது, காமம் அற்றத் தன்மை. திருவள்ளுவர் சமணர் என்றால் அவர் சமண மதத்திற்குப் புறம்பான காமத்துப்பாலை ஏன் எழுதினார்?

2. திருக்குறளும், மனுஸ்ம்ரிதியும்
மனுஸ்ம்ரிதி - 9.12:
அரக்ஷிதா க்ருஹே ருத்தா: புருஷைர் ஆப்தகாரிபி:|
ஆத்மனாம் ஆத்மனா யாஸ் து ரக்ஷேயுஸ் தா: சுரக்ஷிதா: ||
வீட்டிற்குள் நன்கு நம்பத்தகுந்த வேலையாட்களைக் கொண்டு காவலில் வைக்கப்படுவது பெண்களுக்குக் காவலல்ல. அவர்கள், மனத்தால் பிறழாமல் தமக்குத் தாமே காவலாய் இருப்பதே தகுந்த காவலாகும்.

திருக்குறள் - 57 இதே கருத்தை அப்படியே கூறுகிறது :
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

மனுஸ்ம்ரிதி - 3.78:
யஸ்மாத் த்ரயோ அப்யாஷ்ரமினோ ஞானே அன்னேன ச அன்வஹம் |
க்ருஹஸ்தேன ஏவ தார்யந்தே தஸ்மாஜ் ஜ்யேஷ்டாஷ்ரமோ க்ருஹீ ||
(ப்ரஹ்மசாரி, சந்யாசி மற்றும் வானப்ரஸ்தம் என்ற) மற்ற மூன்று ஆஷ்ரமங்களில் உள்ளவர்களும் தமது அறிவிற்காகவும், உணவிற்காகவும் இல்லறமாகிய க்ருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ளவர்களையே நம்பி இருப்பதால், இல்லறம் என்றழைக்கப்படும் கிருஹஸ்தாச்ரமம் அனைத்திலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

திருக்குறள் 41 மற்றும் 42 இதே கருத்தை அப்படியே வலியுறுத்துகின்றன:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இரந்தார்க்கு
இல்வாழ்வான் என்பான் துணை (42)

மேலும், சமண மதத்தில் (ப்ரஹ்மசர்யம், க்ருஹஸ்தம், வானப்ரஸ்தம் மற்றும் துறவறம் என்னும்) நான்கு சமுதாய வழிமுறைகள் இல்லை. இவை வேதங்களில் (மற்றும் அதை சார்ந்த மனுஸ்ம்ரிதி போன்ற இந்து நூல்களில்) மட்டுமே உள்ளது.

மனுஸ்ம்ரிதி - 2.218:
யதா கணன் கனித்ரேன நரோ வார்யதிகச்சதி |
ததா குருகதாம் வித்யாம் ஷுஷ்ரூஷுர் அதிகச்சதி ||
எவ்வாறு மண்வெட்டியைக் கொண்டு மண்ணில் தோண்டும் மனிதனுக்குத் தோண்டுமளவும் தண்ணீர் கிடைக்கிறதோ, அவ்வாறே தனது குருவிடம் பணிவாக உள்ள ஒருவனுக்கு அறிவு கிடைக்கிறது.

திருக்குறள் - 396:
தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத்தூறும் அறிவு.

3. திருக்குறளில் இந்து கடவுள்கள் பற்றிய குறிப்புகள் :
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் 
தாஅய தெல்லாம் ஒருங்கு (610)  
இங்கு அடியளந்தான் என்பது மூவுலகையும் தனது அடியால் அளந்த வாமன அவதாரத்தைக் குறிக்கும்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் 
இந்திரனே சாலுங் கரி (25)
இங்கு இந்திரனைக் குறிப்பிடுவதோடு நிறுத்தாமல் அவனை விசும்புளார் (தேவர்களின்) கோமான் (அரசன்) என்று தெளிவாகக் கூறுகிறார்.

அகன் அமர்ந்து செய்யாள் உறையும்-முகன் அமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல் (84)
 இந்தக் குறளில் செய்யாள் என்பது சிவந்த நிறமுடைய திருமகளைக் குறிக்கும். இதை நான் கூறவில்லை -  பகுத்தறிவுப் பாசறைகளின் தலைவர் திரு. கருணாநிதிஅவர்களே தன் திருக்குறள் உரையில் கூறியுள்ளார். அவர் பல குறள்களுக்குப் பகுத்தறிவு சொட்ட சொட்ட உரை எழுதியுள்ளார். அவரால் கூட இந்த மாதிரி ஓரிரு குறள்களுக்கு பகுத்தறிவுச் சாயம் பூச முடியவில்லை (பெயிண்டு தீர்ந்திடிச்சி போல).

அடுத்ததாக, கொடுங்கோல் அரசன் ஆட்சியில் என்னென்ன கெடுதல்கள் வரக்கூடும்? வள்ளுவரின் கூற்றுப்படி,
ஆ பயன் குன்றும்; அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனில் (560)
அறுதொழிலோர் என்றால் (வேதம்) ஓதுதல், ஓதுவித்தல், வேட்டல்  வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய ஆறு  செயல்களை மட்டுமே செய்யக்கூடிய அந்தணர்களைக் குறிக்கும். நூல் என்பது வேதங்களைக் குறிக்கும். கொடுங்கோல் அரசனின் ஆட்சியில் பசுக்கள் பால் பொழியாது. அந்தணர்கள்  வேதம் ஓதமாட்டார்கள். இது "கோ ப்ராஹ்மணேப்ய: சுபமஸ்து நித்யம்....." என்னும் வேத வாழ்த்தொலியை ஒத்து இருக்கிறது (வேதங்கள் பசுக்களும், அந்தணர்களும் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்துகிறது. திருக்குறளோ, கொடுங்கோல் அரசனின் நாட்டில் இவை இரண்டும் குறையும் என்று எச்சரிக்கிறது). சமணரான திருவள்ளுவர் ஏன் அந்தணர்கள்  வேதத்தை மறப்பதை ஒரு பெரிய கேடாகக் குறிப்பிட வேண்டும்?

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் 
தாமரைக்கண்ணான் உலகு.
காதலைப் பற்றிப் பேசும்போது கூட இந்து மதத்திலிருந்து தான் மேற்கோள் காட்டுகிறார் வள்ளுவர். தமது காதலியின் தோள்களை அணைப்பதை விட வைகுண்டம் பெரிதா என்று  கூறுகிறார்.
தாமரைக்கண்ணன் என்பது திருமாலிற்கு மட்டுமே இடப்படும் சிறப்புத் திருநாமம். திருநெல்வேலி நவதிருப்பதியில் ஒரு கோயிலில் பெருமாளுக்கு செந்தாமரைக்கண்ணன் என்றே பெயர்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். உண்மை இவ்வாறு இருக்க, பள்ளிப்பாடங்களில் அரசியல் ஆதாயத்திற்காக முறையற்ற கருத்துக்களையும் அரைகுறையான செய்யுள்களையும் கற்றுக்கொடுக்கும் இந்த "போலி மதச்சார்பின்மையும், உண்மையை மறைக்கும் கண்மூடித்தனமான மொழிவெறியும்" நமக்குத் தேவைதானா?

நமது குழந்தைகளுக்கு நமது இலக்கியங்களையும், வரலாற்றையும் கசடறக் கற்றுத்தருவோம்.

2 comments:

  1. மிகவும் அருமையான பதிவு சிவா. திருக்குறள் விளக்கங்கள் மிகவும் தெளிவாக எளிமையாக உள்ளது.நிறைய புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி சிவா. நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்

    ReplyDelete